ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடருக்காக நியூசிலாந்து அணியினர் இந்தியா வந்துள்ளனர். கடந்த ஜனவரி 18ஆம் தேதி தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத் ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் ரோஹித் சர்மாவின் தலைமையிலான இந்திய அணியும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டாம் லதாம் தலைமையிலான நியூசிலாந்து அணியும் போட்டியிட்டன. இப்பொட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மாவும் ஷுப்மன் கில்லும் களமிறங்கினார்கள். தொடக்க ஜோடியாக இருவருமே சேர்ந்து அறுபது ரன்கள் எடுத்த நிலையில் ரோஹித் ஷர்மா 34 ரன்களுக்கு தன் விக்கெட்டைப் பறிகொடுத்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி 8 ரன்னும், இஷான் கிஷான் 5 ரன்னும், சூர்ய குமார் யாதவ் 31 ரன்னும், பாண்டியா 28 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தார்கள். பின்னர் தொடர்ந்து களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 12 மற்றும் ஷர்துல் தாக்கூர் 3 போன்ற சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதி வரை நிலைத்து ஆடிய ஷுப்மன் கில் தன்னுடைய முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.
மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேற பொறுமையாக ஆடினார் ஷுப்மன் கில். மேலும் அவர் எதிர்கொண்ட இறுதி எட்டு பந்துகளில் ஆறு சிக்சர்களை பறக்கவிட்டார். இது ஷுப்மன் கில்லின் முதல் இரட்டை சதம் ஆகும். மேலும் இரட்டை சதம் அடித்தவர்களின் பட்டியலான சச்சின், சேவாக், ரோஹித், கப்டில், கெய்ல், இஷான் கிஷான் வரிசையில் கில்லும் இடம் பிடித்தார். இவர் இரட்டை சதம் அடித்த ஐந்தாவது இந்திய வீரர் ஆவார். முக்கியமாக இரட்டை சதம் அடித்தவர்களில் குறைந்த வயதினை உடையவர் ஷுப்மன் கில் ஆவார். கில்லின் வயது இருபத்தி மூன்றே ஆகும். இறுதியாக கில் 208 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்திய அணி மொத்தமாக 50 ஓவர் முடிவில் 349 ரன்கள் குவித்தது.
பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணியினர் சொற்ப ரன்களில் வெளியேற ப்ரேஸ்வெல்லும் சாண்டினரும் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். அதிகபட்சமாக ப்ரேஸ்வெல் இறுதிவரை போராடி 140 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்திய தரப்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்கள் வீழ்த்தினார். நியூசிலாந்து அணி 337 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியுற்றது. ஆட்ட நாயகன் விருதினை ஷுப்மன் கில் தட்டிச் சென்றார்.
Discussion about this post