சிவசேனா ஆட்சியமைக்க விரும்பினால் தேவையான ஆதரவைப் பெற முடியும்: சஞ்சய் ராவுத்

மகாராஷ்டிரத்தில் சிவசேனா தலைமையில் ஆட்சியமைக்கத் தேவையான ஆதரவைப் பெற முடியும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவுத் தெரிவித்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரச் சட்டமன்றத் தேர்தலில் பாஜக – சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. 164 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 105 இடங்களில் வெற்றிபெற்றது. 124 தொகுதிகளில் போட்டியிட்ட சிவசேனா 56 இடங்களில் வெற்றிபெற்றது. முதல் இரண்டரை ஆண்டுக்காலம் முதலமைச்சர் பதவியைத் தங்களுக்குத் தர வேண்டும் என சிவசேனா கோரி வருவதாலும், அதை ஏற்க பாஜக மறுப்பதாலும் அங்கு ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்நிலையில் சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவுத், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியது மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் செய்தியாளரிடம் பேசிய சஞ்சய் ராவுத், சிவசேனா ஆட்சியமைக்க விரும்பினால் தேவையான ஆதரவைப் பெற முடியும் எனத் தெரிவித்துள்ளார். அதிகாரப் பகிர்வை விரும்பியே மக்கள் வாக்களித்துள்ளதாகவும், சிவசேனாவைச் சேர்ந்தவர் முதலமைச்சராக வேண்டும் என மக்கள் விரும்புவதாகவும் சஞ்சய் ராவுத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version