தொழிலாளர்களை வற்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – மத்திய அரசு எச்சரிக்கை!

ஊரடங்கு விதிகளை மீறி தினக்கூலி தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் தினக்கூலி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் இருந்து நேற்று சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயிரக்கணக்கானோர் ஆனந்த் விகார் பேருந்து நிலையத்தில் குவிந்தனர். கொரோனா வைரஸ் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் தினக்கூலி தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக சொந்த ஊர்களுக்கு செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. ஊதியம் உட்பட அனைத்து வசதிகளையும் தொழிலாளர்களுக்கு செய்து தர வேண்டும் எனவும், இருப்பிடங்களை காலி செய்யுமாறு மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களை வற்புறுத்தும், வீட்டு உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version