நீங்கள் இந்தியாவில் எந்த மூலைக்கு சென்றாலும் அங்கே ஒரு வரலாற்று சின்னம் உங்களை வரவேற்கும். சிறு கல்லுக்கும் கூட இங்கு வரலாறு உண்டு என்னும் போது பயணங்களில் நம்மை கடந்து செல்லும் ரயில் நிலையங்களுக்கு இருக்காதா என்ன?… அப்படி வரலாற்றை கொண்டுள்ள இந்தியாவின் ரயில் நிலையங்கள் சில…
சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், மகாராஷ்டிரா:
இந்த ரயில் நிலையத்தின் வடிவமைப்பு விக்டோரியன் கோதிக் மற்றும் பாரம்பரிய இந்திய கட்டிடக்கலைகளை இணைத்து வடிவமைக்கப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டுகளின் தொடக்கம் வரை “விக்டோரியா ரயில் நிலையம்” என்று அழைக்கப்பட்டது. பின் 21 ஆம் நூற்றாண்டில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடங்களில் ஒன்றாக அறிவித்தது. மேலும் மும்பையில் கட்டுவதற்கு மிக நீண்ட நேரம் எடுத்துக்கொண்ட கட்டிடமாகவும் திகழ்கிறது. பின்னர் 1966 ஆம் ஆண்டில், சத்ரபதி சிவாஜி நிலையமாக என மறுபெயரிடப்பட்டது.
பரோக் நிலையம், இமாச்சலப் பிரதேசம்:
கல்கா-சிம்லா ரயில் பாதையில் அமைந்துள்ளது இந்த சிறிய ரயில் நிலையம். சிம்லாவில் மலைக்காட்சிகளுக்கு நடுவே அமைந்துள்ளதால் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். ஆனால் 1898 ஆம் ஆண்டில், இந்த ரயில் நிலைய சுரங்கப்பாதை கட்டுமானத்தில் பிழை செய்ததற்காக, கலோனல் பரோக் என்பவருக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் அபராதம் விதித்தது. இந்த சம்பவம் பரோக்கை பாதித்து அவர் தற்கொலை செய்துக்கொண்டார். இன்றளவும் இந்த சுரங்கப்பாதையில் அவர் பேயாக அலைவதாக நம்பப்படுகிறது.
பெகுன்கோடர் நிலையம், மேற்கு வங்கம்:
புர்லியா மாவட்டத்தில் அமைந்துள்ள பெகுன்கோடர் ரயில் நிலையம் நான்கு தலைமுறைகளாக வெறிச்சோடி காணப்பட்டது. 1967ம் ஆண்டில், வெள்ளை நிற உடையணிந்த ஒரு பெண்ணின் பேயைக் கண்ட ரயில்வே ஊழியர் இறந்தார். அதன்பிறகு, இங்கு சென்றாலே பேய் பிடிக்கும் என்ற வதந்தி ரயில் நிலைய ஊழியர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் மனதில் ஆழமாக பதிந்தது. ஆனால் மீண்டும் 2017ல் மாநில அரசால் திறக்கப்பட்டது.
ரஷித்புரா கோரி நிலையம், ராஜஸ்தான்:
ராஜஸ்தானின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையம் உள்ளூர் கிராம மக்களால் நடத்தப்படும் ரயில் நிலையமாகும். போதிய வருமானம் ஈட்டாததால் இந்த நிலையம் 2005ம் ஆண்டு மூடப்பட்டது. ஆனால் 2009 ஆம் ஆண்டில், உள்ளூர் மக்களின் போராட்டத்தால் மீண்டும் திறக்கப்பட்டு அவர்களாலேயே பராமரிக்கப்படுகிறது.
துத் சாகர் நீர்வீழ்ச்சி ரயில் நிலையம், கோவா:
கோவாக்கு சுற்றுலா செல்லும் மக்களுக்கு இந்த இடம் நிச்சயம் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். தெற்கு கோவாவில் அமைந்துள்ள துத் சாகர் நீர்வீழ்ச்சிக்கு செல்பவர்கள் ரயிலில் செல்லும் போது அருவியின் அழகை காணலாம். தமிழில் வெளியான தொடரி படத்தில் இந்த நீர்வீழ்ச்சி ரயில் நிலையம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
சர்பாக் நிலையம், உத்தரபிரதேசம்:
முகலாய மற்றும் ராஜஸ்தானி கட்டடக்கலையில் கட்டப்பட்ட இந்த ரயில் நிலையம் பார்ப்பதற்கு அரண்மனை போல தோன்றும். இன்னும் சுவாரஸ்யமாக சொல்லவேண்டுமென்றால் இதன் முதல் தள மாடிக்கு சென்றால் கீழே செல்லும் ரயில்களின் சத்தம் கூட கேட்காத அளவிற்கு பார்த்து பார்த்து செதுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post