மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பலத்த மழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் கால்வாயின் சுவர் இடிந்து விழுந்ததில் 7பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் ஏற்கெனவே அணைகளும் ஏரிகளும் நிரம்பியிருந்த நிலையில் மீண்டும் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. இதனால் கால்வாயில் கரைமீறிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தின் வேகத்தைத் தாங்க முடியாமல் புனே நகரில் சாகர்நகர் என்னுமிடத்தில் கால்வாயின் சுவர் இடிந்து விழுந்தது. நள்ளிரவு அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
இதில் பத்துக்கு மேற்பட்டோர் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெள்ளத்தால் 150 வீடுகள் சேதமடைந்துள்ளன. மீட்புப் பணியில் ஈடுபட்ட தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் இதுவரை 7 பேரின் உடல்களை மீட்டுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள புனே, புரந்தர், பாராமதி, போர், ஹவேலி ஆகிய வட்டங்களில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த 5 வட்டங்களிலும் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதேபோல் மேற்குவங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் ரத்துவா என்னுமிடத்தில் புல்கர் ஆற்றின் கரை நூறு மீட்டர் நீளத்துக்கு உடைந்தது. இதனால் ஆற்றுவெள்ளம் அப்படியே விளைநிலங்களுக்குள் பாய்ந்தது. ஊருக்குள்ளும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளதால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான வேறிடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
Discussion about this post