தந்ததிற்காக யானையை வேட்டையாட முயன்ற நான்கு பேருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளா என மூன்று மாநில காடுகளை இணைக்கும் கோவை மாவட்டத்தின் சிறுமுகை வனப்பகுதி, யானைகளின் முக்கிய வழித்தட பாதையாகும். கடந்த 2011 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டுள்ள சிறுமுகை காப்புக்காட்டுகுள் புகுந்து ஒரு ஆண் காட்டு யானையை கற்களால் தாக்கியும் துப்பாக்கியால் சுட்டும் வேட்டையாட முயன்ற ஒரு கும்பலை வனத்துறை சுற்றி வளைத்து கைது செய்தது.
விசாரணையில் இவர்கள் தேனி மாவட்டம், வருசநாடு பகுதியை சேர்ந்த சென்ட்ராயன், சிவா, குபேந்திரன், சிங்கம் என தெரிய
வந்தது. இதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கின் விசாரணை மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், வழக்கில் தீர்ப்பளித்த மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு, குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூபாய் 10 ஆயிரத்து 500 அபராதமும் விதித்தார்.
Discussion about this post