அரசு உதவிபெறும் பள்ளிகள், பள்ளியின் பெயர் பலகையில், இது அரசு உதவிபெறும் பள்ளி என்று கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகள், தங்கள் பெயர்ப்பலகையில் பள்ளியின் தனிப்பட்ட பெயரை மட்டும் குறிப்பிடுவதால் பொதுமக்கள் அதைத் தனியார் பள்ளி என்று நினைத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளதாக பள்ளிக்கல்வி மதிப்பீட்டுக்குழு, பள்ளிக்கல்வித்துறைக்கு அறிக்கை அளித்துள்ளது.
மதிப்பீட்டுக் குழுவின் அறிக்கையின்படி, தமிழகம் முழுவதும் இயங்கும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தங்கள் பள்ளியின் பெயர்ப்பலகையில், இது அரசு உதவிபெறும் பள்ளி என்று தமிழிலும், Government aided school என்று ஆங்கிலத்திலும் திருத்தம் செய்து பொதுமக்கள் பார்வையில்படுமாறு வைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு நேரில் சென்று பள்ளிகளின் பெயர்ப்பலகையில் அரசு உதவிபெறும் பள்ளி என்று குறிப்பிடப்பட்டுள்ளதை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கையாக அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.