முஸ்லீம் பெண்களையும் மசூதிக்குள் சென்று வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கில் தேசிய மகளிர் ஆணையம், முஸ்லீம் தனிநபர் சட்டவாரியம் பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான மசூதிகளுக்குள் முஸ்லீம் பெண்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்படுவதில்லை. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் யாஷ்மீன், ஜுபைர் தம்பதியினர் மனுதாக்கல் செய்தனர். அதில் முஸ்லீம் பெண்களை மசூதிகளுக்குள் அனுமதிக்க கூடாது என திருக்குர்ஆன், மற்றும் இஸ்லாமிய பொன் மொழிகளில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என சுட்டிக் காட்டியிருந்தனர்.
இதனை விசாரித்த நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே மற்றும் எஸ்.அப்துல் நசீர் அமர்வு, மனுதாரர்களின் பதிலில் தெளிவு இல்லை என்று கூறியதுடன், சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்த வழக்கையும் விசாரிப்பதாக கூறினார்.
மேலும் மசூதிகளுக்கு பெண்களை அனுமதிப்பது குறித்து தேசிய மகளிர் ஆணையம், மத்திய வக்பு வாரியம் மற்றும் முஸ்லீம் தனிநபர் சட்டவாரியம் பதிலளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
Discussion about this post