தீபாவளியன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரத்திற்கு மேல் அனுமதி வழங்க முடியாது என்றும், பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசே முடிவு செய்துகொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பில் திருத்தம் செய்யக்கோரி, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தீபாவளியன்று காலை 4.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டது.
இதேபோன்று, சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு மனுக்களும் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், வடமாநிலங்களில் தீபாவளிப் பண்டிகை பிற்பகலுக்குப் பிறகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது என்றும், தமிழகத்தில் கலாச்சாரத்தோடு தொடர்புடைய பண்டிகையாக கொண்டாடப்படுவதால், பட்டாசு வெடித்துக் கொண்டாட கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
வாதங்களைக் கேட்டறிந்த உச்சநீதிமன்றம், தமிழகத்தில் பட்டாசு வெடிக்க அனைத்து மாநிலங்களையும் போல 2 மணி நேரம் மட்டுமே அனுமதிக்க முடியும் என தெரிவித்துள்ளது. மேலும், பட்டாசு வெடிக்கும் 2 மணி நேரத்தை தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
Discussion about this post