அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு பாதுகாப்புக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் என்.ஆர்.எஸ் அரசு மருத்துவமனையில் கடந்த வாரம் உயிரிழந்த நோயாளியின் உறவினர்கள் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இருவரை தாக்கினர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து, அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி கடந்த 6 தினங்களாக மாநில மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய மருத்துவ சங்கம் விடுத்திருந்த அழைப்பை ஏற்று, நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேற்குவங்க முதலமைச்சருடன் மாநில மருத்துவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து வேலைநிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதனிடையே, அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட மனுமீதான விசாரணை இன்று நடைபெறுகிறது. அரசு மருத்துவமனையில் பாதுகாப்புப் பணிகளில் காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் இதில் கோரப்பட்டுள்ளது.