சி.பி.ஐ இயக்குனர்கள் தொடர்ந்த வழக்கில் இடைக்கால இயக்குனர் கொள்கை முடிவு எடுக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்து விசாரணையை ஒத்தி வைத்தது.
லஞ்சப் புகாரில் சிக்கியதற்காக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கு மத்திய அரசு கட்டாய விடுப்பு அளித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், சி.பி.ஐ. இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவ், வழக்கமான பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார். வழக்கு விசாரணை முடியும் வரை, சி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் கொள்கை முடிவுகள் எதையும் எடுக்கக் கூடாது என நீதிபதி தெரிவித்தார்.
விசாரணை அதிகாரிகள் மாற்றம் தொடர்பாக மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் நோட்டீஸ் அளித்துள்ளார்.
மேலும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் பணியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி முன்னிலையில் 10 நாட்களுக்குள் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும் என தலைமை நீதிபதி தெரிவித்தார். அப்போது, விசாரணை நடத்த பத்து நாட்கள் போதாது என கூறிய மத்திய அரசு வழக்கறிஞர், நீதிபதிகள் முன்பு விசாரணை நடத்தவும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 12ஆம் தேதிக்கு வழக்கை தலைமை நீதிபதி ஒத்தி வைத்தார்.