பட்டாசால் ஏற்படும் காற்று மாசு மற்றும் வாகனத்தால் ஏற்படும் காற்று மாசு குறித்த தகவல்களை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பட்டாசுக்கு பதிலாக பசுமை பட்டாசுகளை தயாரிக்க வேண்டும், குறிப்பிட்ட நேரத்தில்தான் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு, பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு பேரிடியாக அமைந்தது.
இந்த நிலையில் பசுமை பட்டாசு என்றால் என்ன என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என பட்டாசு ஆலை நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனிடையே உச்ச நீதிமன்றம் தீர்ப்பினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மேல் முறையீடும் செய்யப்பட்டது. இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு வந்த போது, பட்டாசால் ஏற்படும் காற்று மாசு மற்றும் வாகனத்தால் ஏற்படும் காற்று மாசு குறித்த அட்டவணையை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தமிழ்நாடு அரசு சார்பாக வாதிட்ட வழக்கறிஞர், ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாகவும் பேரியம் உப்பு இல்லாமல் பட்டாசு தயாரிக்க முடியாது எனவும் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. இதையடுத்து அடுத்த மாதம் 3-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Discussion about this post