இந்திய விமானப் படையில், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றிவந்த மிக்-27 போர் விமானங்கள் இந்திய இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றுள்ளன. மிக்-27 விமானங்கள் செய்த சாதனைகள் என்ன? ஓய்வுக்குக் காரணம் என்ன?
மிக்-27 அல்லது மிகோயன் குருவிச் மிக்-27 என்பது தரைத்தாக்குதலுக்குப் பயன்படும் இராணுவ விமானமாகும். இது முதலில் மிகோயன் குருவிச் என்ற விமானம் கட்டும் நிறுவனத்தால் சோவியத் யூனியனின் வான்படைக்காக 1975ல் வடிவமைக்கப்பட்டது. பின்னர் இந்தியாவுக்காக பகதூர் என்றப் பெயருடன் சில வேறுபாடுகளுடன் இது மாற்றி அமைக்கப்பட்டு 1985ஆம் ஆண்டில் இந்திய இராணுவத்தில் சேர்க்கப்பட்டது.
இந்த விமானம் மணிக்கு ஆயிரத்து 700 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது, 4 ஆயிரம் கிலோ வெடிபொருட்களை தாங்கும் கொள்ளளவை உடையது . இந்தியத் தரைப்படைக்கு மிகப் பெரிய பாதுகாவலனாக விளங்கிய இந்த விமானம் எதிரிகள் மீது துல்லியமாக குண்டுவீசும் திறனுக்காக பெரிதும் பாராட்டப்பட்டது.
மிக முக்கியமாகக் கடந்த 1999ஆம் ஆண்டில் நடைபெற்ற கார்கில் போரில், பாகிஸ்தானின் இராணுவ முகாம்கள் மிக்-27 விமானங்கள் மூலமாகத்தான் குண்டு வீசித் தகர்க்கப்பட்டன. அறிமுகமாகி 30 ஆண்டுகள் ஆன நிலையில், விபத்துகள் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளும் மிக்-27 விமானங்களுக்கு விடை கொடுத்து வருகின்றன. இதே காரணத்தால்தான் இந்திய இராணுவமும் மிக்-27 விமானங்களுக்கு விடை கொடுக்க முடிவெடுத்து உள்ளது. இந்தியாவில் கடந்த 2001ஆம் ஆண்டு முதல் மிக்-27 விமானங்களால் 12 விபத்துகள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ராஜஸ்தான் மாநில இராணுவ விமானத்தளத்தில் இயங்கி வந்த ‘மிக்-27’ விமானங்களின் இரு ஸ்குவாட்ரான்களில் ஒன்றுக்கு, ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது மற்றும் கடைசி ஸ்குவாட்ரானுக்கு தற்போது ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.
இதையொட்டி நடைபெற்ற விழாவில், ஏர் மார்ஷல் எஸ்.கே. கோட்டியா உள்ளிட்ட விமானப் படை அதிகாரிகள் கலந்துகொண்டு மிக்-27 விமானங்களுக்குப் பிரியாவிடை கொடுத்தனர். மிக்-27 இராணுவ விமானங்கள் தங்கள் இறுதி நாளில் வானில் பறந்து, பல்வேறு சாகசங்களை நிகழ்த்தின.
தற்போது உலகின் வேறு எந்த நாட்டின் இராணுவத்திலும் மிக்-27 விமான சேவை இல்லாத நிலையில், இத்தோடு இராணுவங்களின் வரலாற்றில் மிக்-27 விமானங்களின் அத்தியாயம் ஒட்டுமொத்தமாக நிறைவுக்கு வந்துள்ளது.
Discussion about this post