ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் இரு தினங்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி மீது இலஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருந்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மகனும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி மேலும் உள்துறை செயலர் ஃபனிந்த ரெட்டி ஆகிய மூவரின் மீதும் இலஞ்ச ஒழிப்புச் சட்டம் மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் கூட்டுச்சதி உள்ளிட்டக் குற்றங்களுக்காக அவர்கள் மீது லஞ்ச ஒழிப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளேன் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய சவுக்கு சங்கர், நான் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே இயக்குநரைப் பார்த்து புகார் வழங்க வேண்டும் என்று வந்தேன், ஆனால் ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் என்னை சந்திக்க மறுத்துவிட்டார் என்று தெரிவித்தார். மேலும் டி.எஸ்.பி ராமதாஸிடம் இந்தப் புகாரைத் தரச் சொன்னார்கள், அதன்பேரிலே நான் டி.எஸ்.பி ராமதாஸிடம் ஸ்டாலின் மீதான புகாரை அளித்துள்ளேன் என்று கூறினார்.
புகாரின் அடிப்படை நோக்கம் என்னவென்று தொடர்ந்து செய்தியாளர்களிடம் விளக்கினாற் சவுக்கு சங்கர். அதாவது முதல்வரின் அதிகாரத்தில்தான் உள்துறை உள்ளது, அவரது மகன் ரெட் ஜெயிண்ட் எனும் நிறுவனத்தை நடத்துகிறார், நான் அந்த ரெட் ஜெயிண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தை ஸ்டாலின் அவர்களின் பினாமி நிறுவனம் என்று குற்றம் சாட்டுகிறேன் என்று கூறினார். தொடர்ந்து பேசிய சவுக்கு சங்கர், ஸ்டாலின் தனது பினாமி நிறுவனத்தின் சம்பாத்தியத்திற்காக அதிகாலை 1 மணி காட்சிகள் திரையிட வழிவகை செய்துள்ளார், குறிப்பாக பொங்கல் பண்டிகையினை ஒட்டி வெளியான வாரிசு, துணிவு ஆகிய திரைப்படங்களுக்கு அதிகாலை காட்சியைத் திரையிடுவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார் என்று குறிப்பிட்டார். இதற்கு சாட்சி தேவையில்லை என்றே நினைக்கிறேன், காரணம் அனைவருக்குமே இது தெரிந்த ஒன்றுதான், தேவைப்பட்டால் யூடியூபில் சென்று பார்க்கவும் என்று சவுக்கு சங்கர் குறிப்பிட்டிருந்தார். இந்த அதிகாலைக் காட்சியினால் ஒரு ரசிகனின் உயிர் போய் உள்ளது. குறிப்பாக, ரெட் ஜெயிண்ட் வெளியிட்ட துணிவு படத்தினை காண்பதற்காக அதிகாலை 1 மணி காட்சிக்கு வந்தவர்தான் அந்த ரசிகர். இது போன்ற உயிரிழப்பு ஏற்பட காரணமாக இருக்கும் ஆளும் கட்சியினர் மீது காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.