விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 100 ஆண்டுகளைக் கடந்து பாரம்பரியமிக்க சுவையுடன் சாத்தூர் காரச்சேவு தயாரிக்கப்படுகிறது.
பொதுவாகத் தென்மாவட்டத்தில் பெரும்பாலான ஊர்கள் முறுக்கு, அல்வா, பால்கோவா, மக்ரோன், தொதல் போன்ற பலகார வகைகள் தயாரிப்பில் பெயர் பெற்றவை.ஆனால் சேவு என்ற பலகார வகைக்கு புகழ் பெற்ற ஊர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் தான். சென்னை- கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் உள்ள இந்த ஊரைத் தாண்டிச் செல்லும் யாரையும் தன்பால் ஈர்த்துவிடும் குணம் கொண்டது சாத்தூர் சேவு.சாத்தூர் பேருந்து நிலையத்திலேயே ‘சாத்தூர் சேவு’ ‘சாத்தூர் சேவு’என ஒலிக்கும் வியாபாரிகள் சத்தம் இதன் ருசிக்குச் சான்றாகும்.
சாத்தூர் காரச்சேவு பலகார பிரியர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.இதற்கு காரணம் சாத்தூர் பகுதியில் ஓடும் வைப்பாறு ஆற்று நீர் மற்றும் சாத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விளையும் மிளகாய் வற்றல் ஆகியவை தான்.
சேவு வகைகளில் நயம் சேவு, நடப்பு சேவு, காரச்சேவு, சீரக சேவு, மிளகு சேவு, பட்டர் சேவு, சர்க்கரை சேவு, குச்சி சேவு, கருப்பட்டி சேவு என பல வகைகள் உள்ளன.நடப்புச் சேவு சிறு குழந்தைகளுக்கு பிடிக்கும் விதமாகவும், காரச்சேவு எனப்படும் காரம் ஓரளவு கொண்ட சேவு ரகம் பெரியவர்கள் விரும்பி உண்ணும் வகையிலும் தயாரிக்கப்படுகிறது.
சற்று தடிமனாக கடுமையான காரத் தன்மையுடன் தயாரிக்கப்படும், காரச்சேவு வகைகள் சாப்பாட்டுடன் சேர்த்து கொள்ளப்படுகிறது. தீபாவளியை பண்டிகை வருவதற்கு சில நாட்களே உள்ள நிலையில் சாத்தூரில் சேவு தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.மேலும் சேவு வகைகளை வாங்க கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தலை தீபாவளி கொண்டாடும் திருமண தம்பதிகளுக்கும் சீர் பலகாரமாக இனிப்புகளுடன், சாத்தூர் காரச் சேவுகளையும் வாங்கி செல்கின்றனர்.சாத்தூரில் தயாரிக்கப்படும் சேவு வகைகள் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் உள்ள பெரிய பெரிய கார்ப்ரேட் நிறுவனங்களுக்கும் அனுப்பப்படுகிறது.
Discussion about this post