அரசியல் சர்ச்சை, கதை திருட்டு புகார் போன்றவற்றை தாண்டி திரைக்கு வந்துள்ளது சர்கார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், மெர்சல் படத்தில் அரசியல் இருந்ததாகவும், இந்த படத்தில் அரசியலில் மெர்சல் செய்துள்ளதாகவும் கூறியிருந்தார். உண்மையில் அப்படித்தான் உள்ளதா? சர்கார்.
பிரம்மாண்ட நட்சத்திரங்களை தாண்டி எந்தவொரு படத்தின் வெற்றிக்கும் மூலகாரணம் கதை. ஆனால் சர்கார் படத்தின் கதையே திருடப்பட்டது என்ற புகார் எழுந்தது. இதையடுத்து வழக்கு தொடர்ந்த வருண் ராஜேந்திரனின் பெயர் படத்தின் டைட்டில் கார்டில் இடம்பெறும் என்று கூறியிருந்தார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால் நன்றி என்பதற்கு பதிலாக தான் ஏற்கனவே வெளியிட்ட அறிக்கையை பயன்படுத்தி சொன்ன சொல்லில் இருந்து மாறியுள்ளார்.
ரமணா, ஏழாம் அறிவு, கத்தி, துப்பாக்கி என தனது முந்தைய படங்களில் புதுமையான காட்சி அமைப்புகள், எதிர்பாராத திருப்பங்கள் போன்றவற்றால் கவனம் ஈர்த்திருப்பார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால் சர்கார் படத்தில் எந்தவொரு இடத்திலும் அத்தகைய கவனஈர்ப்பு அம்சங்கள் இல்லை. முதல்வன், கோ போன்ற படங்களின் சாயல்கள் அப்பட்டமாக தெரிகிறது.
தமிழுக்கு அரசியல் படங்கள் புதிதல்ல. எம்.ஜி.ஆர். காலந்தொட்டு அரசியல் பேசும் படங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் கதைக்கு தக்கவாறு அரசியல் இடம்பெற்று இருக்கும். அதுதான் நம்பகத் தன்மையாகவும் இருக்கும். நேரடியாக, சாத்தியமில்லாத மறுதேர்தல், 234 தொகுதிகளுக்கும் 14 நாட்களில் வேட்பாளர்களை தேர்வு செய்வது, நீதிபதிகளுக்கும் – தேர்தல் அதிகாரிகளுக்கும் அரசியல் சாசன வகுப்பு எடுப்பது என்று ரசிகர்களையும் – தமிழக மக்களையும் கிள்ளுக்கீரையாக நினைத்து இருக்கிறார்கள் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசும், எழுத்தாளர் ஜெயமோகனும். இந்த கதையா களவாடி எடுக்கப்பட்டது என்று எண்ணத் தோன்றுகிறது, இதன் உருவாக்கம்.
நடிகர் விஜய். நன்றாக ஆடக் கூடியவர், குழந்தைகள் – பெண்களை கவர்ந்த நடிகர் என்பதெல்லாம் சரி. ஆனால் இதில் நடிகர் என்ற விஜய்க்கு என்ன வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது என்றே தெரியவில்லை. இழுத்து இழுத்து பேசுவதும், தேவையில்லாமல் திரையை நோக்கி நீட்டி முழுக்குவதும் என்று நமது பொறுமையை சோதிக்கிறார். தங்களுடைய அந்தரங்க அரசியல் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமானால் சர்கார் போன்ற படங்கள் நடிகர் விஜய்-க்கு பயன்படலாம். ஆனால் காசு கொடுத்து திரைக்கு வந்து நேரத்தை செலவழித்து படம் பார்க்கும் ரசிகர்களுக்கு இவர்கள் நியாயம் செய்கிறார்களா என்றால் அது கேள்விக்குறியே?
படத்தில் அரசியல் சீர்திருத்தம் பேசும் நடிகர் விஜய்க்கு உண்மையிலேயே சமூக பொறுப்புணர்வு இருக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது. காரணம் படம் நெடுகிலும் சிகரெட் பிடித்தபடி நடித்துள்ளார் விஜய். கூடவே ஆபாச சொற்களையும் அவ்வப்போது உதிர்த்து செல்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைப்பாளரா என்பதை நம்ப முடியவில்லை. பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி எந்த விதத்திலும் கதையின் ஓட்டத்திற்கு தக்கவாறு இல்லை.
படத்தின் எதிர்நாயகி கதாபாத்திரத்திற்கு கோமளவல்லி என்றும் செல்லப் பெயர் பாப்பா என்றும் சொல்லப்பட்டுள்ளது. வில்லன்களாக நம்பர் ஒன்று, நம்பர் ரெண்டு என்று கையாளப்பட்டுள்ளது. இலவச மிக்சியும், கிரைண்டரும் எதற்கு என்று தீயில் தூக்கி வீசும் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி ஸ்டெர்லைட், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் என்று தற்போது பரபரப்பாக பேசப்படும் விஷயங்கள் அனைத்தும் நேரடியாக கூறப்பட்டுள்ளன. இதனை வைத்துதான் தமிழக அரசியல்வாதிகள் தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொள்வதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் களப் போராளிகளால் ஏராளமான அரசியல் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் அந்த பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லப்பட்டிருக்கும். இதில் பிரச்னைகளை அடையாளம் காண்பவர்கள் முன்வைக்கக்கூடிய தீர்வு என்ன என்பதை இயக்குனர் தான் கண்டுபிடித்து சொல்ல வேண்டும். படத்தில் தக்காளிக்குப் பின்னால் உள்ள சர்வதேச அரசியலை கூறும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசும், நடிகர் விஜயும், இந்த படத்திற்கு பின்னால் உள்ள அரசியலையும் கூறினால் நன்றாக இருக்கும்.
கதாநாயகி கீர்த்தி சுரேஷ், நகைச்சுவை நடிகர் யோகி பாபு இருவரும் திரையில் வந்து போகிறார்கள். தற்போதைய ஊடக உலகை குறிப்பாக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்களை எந்த அளவு தரம் தாழ்ந்து காண்பிக்க முடியுமோ அந்த அளவு ஏளனப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் முருகதாஸ். வேண்டுமென்றே அத்தகைய காட்சிகளை வைக்க வேண்டிய உள்நோக்கம் என்ன என்பதும் தெரியவில்லை.
தனது ஓட்டு வேறு ஒருவரால் கள்ள ஓட்டாக போடப்பட்டதை எதிர்த்து குரல் கொடுக்கும் நாயகன், ஆட்சியாளர்களுக்கு எதிராக இளைஞர்களை களம் இறக்கி வெற்றி பெறுகிறார் என்ற ஒற்றை வரி கனவை சர்காராக்கி இருக்கிறார்கள்.
ஆனால் திரை தேர்தலில் இந்த சர்கார் டெபாசிட்டையாவது பெறுமா என்பதே கேள்விக்குறி.
Discussion about this post