வறட்சியை போக்கும் 'சரபங்கா' திட்டம்

மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரைக் கொண்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்களை நிரப்பும் சரபங்கா திட்டத்திற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார். 565 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். பல வருடங்களுக்குப் பிறகு, குடிமராமத்து திட்டத்தின் கீழ் மேட்டூர் அணை தூர்வாரப்பட்டு, மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் போது திறந்து விடக்கூடிய உபரி நீரானது, வீணாக கடலில் கலக்கிறது. அவ்வாறு வீணாகும் நீரை, ஏரி, குளங்களில் நிரப்பி விவசாயம் செழிக்க “சரபங்கா நீரேற்று பாசன திட்டம்” செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் மூலம், சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி, ஓமலூர், சங்ககிரி, மேட்டூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகளின் எண்ணம் நிறைவேற உள்ளது. இத்திட்டத்தால், அப்பகுதியில் உள்ள மக்களுக்கு பல்வேறு பயன்கள் கிடைக்கின்றன. அந்த பயன்களை தற்போது பார்க்கலாம்…

எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் ஆகிய 4 தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

சேலம் மாவட்டத்தில், 37 ஏரிகளும், எம்.கள்ளிப்பட்டியில் 67 ஏரிகளும், 4238 ஏக்கர் நிலங்கள் இதனால் பயனடையும்.

555 கன அடி உபரி நீர் விவசாய ஏரிகளுக்கும், குளங்களுக்கும் திருப்பி விடப்பட உள்ளது.

மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் தாராளமாக கிடைக்கும்.

விவசாயிகள் தங்களுக்கு ஏதுவான சூழல்களில் சாகுபடி செய்ய எளிமையாக இருக்கும்.

ஏரிகளில் நீரை நிரப்புவதால், நிலத்தடி நீர் செறிவூட்டப்படும்.

ஏரி குளங்களில் நீரை தேக்குவதால், குடிநீர் தட்டுப்பாடு நிலவுவது தவிர்க்கப்படும்.

இந்த திட்டத்தின் மூலமாக, சேலம் மாவட்டத்தில் உள்ள நங்கவள்ளி, மேச்சேரி, வனவாசி, ஜலகண்டபுரம், கொங்கனாபுரம், மகுடஞ்சாவடி, எடப்பாடி ஆகிய பகுதிகளில் இருக்கும் 100க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள், மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீர் மூலமாக நிரப்பப்பட உள்ளன.

இதே போல பிற மாவட்ட மக்களும் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தை விரிவுபடுத்தி, அந்தந்த மாவட்ட ஏரி, குளங்களை உபரி நீர் மூலமாக நிரப்பினால், கோடைகாலத்தில் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை முழுமையாக தவிர்க்க முடியும் என்பது, சேலம் மாவட்டம் மட்டுமல்லாமல், அருகில் உள்ள மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Exit mobile version