மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கும் நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் இரண்டாவது முறையாகச் சந்தித்துப் பேசியுள்ளார்.
மகாராஷ்டிரச் சட்டமன்றத் தேர்தலில் பாஜக – சிவசேனா கூட்டணி பெரும்பான்மை பெற்றாலும், யாருக்கு முதலமைச்சர் பதவி என்பதில் பிடிவாதம் நீடிப்பதால் ஆட்சியமைப்பதில் இழுபறி நிலவுகிறது. தங்கள் தலைமையில் தான் ஆட்சி அமையும் என பாஜக தலைவர்களும், சிவசேனா தலைவர்களும் தனித்தனியாகக் கூறி வருகின்றனர். பாஜகவுடன் பேசுவதாக இருந்தால் முதலமைச்சர் பதவி பற்றி மட்டுமே பேச்சு என சிவசேனா தெரிவித்துவிட்டது.
முதலமைச்சர் பதவியைத் தவிர வேறு எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசலாம் என பாஜக தெரிவித்துள்ளது. இப்போதைய சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் எட்டாம் தேதியுடன் முடிவடையும் நிலையில் இதுவரை எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை.
ஆளுநரும் ஆட்சியமைக்க யாரையும் இதுவரை அழைக்கவும் இல்லை. இந்நிலையில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை இரண்டாவது முறையாக அவரது இல்லத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராவத், மூத்த அரசியல்வாதி என்ற முறையில் சரத்பவாரைச் சந்தித்ததாகவும், மாநில அரசியல் நிலவரம் குறித்து அவரிடம் பேசியதாகவும் தெரிவித்தார்.
Discussion about this post