முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 9ஆம் தேதி சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில், வட்டார அளவிலான குறைதீர்வு கூட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.
முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 9 லட்சத்து 72 ஆயிரத்து 216 மனுக்கள் பெறப்பட்டதாகவும், அதில், 5 லட்சத்து 11 லட்சத்து 186 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டது. மீதமுள்ள 23 ஆயிரத்து 538 மனுக்கள் மீது வரும் 15ஆம் தேதிக்குள் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார். ஏற்றுக் கொள்ளப்படாத மனுக்களை மாவட்ட ஆட்சியர்கள், மறு ஆய்வு செய்து ஏற்றுக்கொள்ள வாய்ப்புள்ள இனங்களில் உரிய தீர்வு காணவும், ஏற்றுக் கொள்ளப்பட்ட மனுக்களின் பயனாளிகளுக்கு வட்ட அளவில் குறைதீர்வு கூட்டங்கள் ஏற்பாடு செய்து நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும் முதலமைச்சர் உத்தரவிட்டார். பெறப்பட்ட மனுக்கள் மீதான வட்டார அளவிலான குறை தீர்வு கூட்டத்தை வரும் 9 ஆம் தேதி சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.
அதைத் தொடர்ந்து மாவட்டந்தோறும் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தலைமையில் நவம்பர் 20ஆம் தேதிக்குள் வட்டார அளவில் கூட்டம் நடத்தப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம், வருவாய் நிருவாக ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Discussion about this post