சேலம் நாடாளுமன்ற தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட இடங்களில் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ஆய்வு மேற்கொண்டார்.
மக்களவைத் தேர்தலை பாதுகாப்பாக நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 345 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில் இவற்றில் 7 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன.
அவற்றில் ஒன்றான ஓமலூர் தொகுதிக்கு உட்பட்ட தொளசம்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் மாவட்ட ஆட்சியர் ரோகிணி மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபா கணிக்கர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து வடக்கு தொகுதி, தெற்கு தொகுதி, வீரபாண்டி, எடப்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளிலும் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். தேர்தலின்போது வாக்காளர்களின் பாதுகாப்பு, வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் குறித்த பணிகளை ஆய்வின்போது அவர்கள் கேட்டறிந்தனர்.