கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை சார்பில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கத்தில் கிறிஸ்துமஸ் மரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே பெரும்பாலான இல்லங்களில் பிளாஸ்டிக் கிறிஸ்துமஸ் மரங்களும், சில வீடுகளில் இயற்கையான கிறிஸ்துமஸ் மரங்களும் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும்.
பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க தமிழக அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை இயற்கையோடு இணைந்து கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் கிறிஸ்துமஸ் மரம் விற்பனை முதன்முறையாகத் தொடங்கப்பட்டுள்ளது.
பண்டிகைகளை இயற்கையோடு இணைந்து கொண்டாடும் வகையில் தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை பல்வேறு முயற்சிகளை முயற்சி கொண்டு வருகிறது, அந்த வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் கிறிஸ்துமஸ் மரங்கள் அதாவது பசுமை மாறா ஊசியிலைக் கூம்பு மரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
சென்னையில் எழிலகத்தில் உள்ள தோட்டக்கலைத் துறை இயக்குநர் அலுவலகம், அண்ணாசாலையில் உள்ள செம்மொழிப் பூங்கா, அரும்பாக்கம் சித்த மருத்துவமனை வளாகம், திருவான்மியூர் தோட்டக்கலைத்துறை மண்டல அலுவலகம், மாதவரம் தோட்டக்கலைத்துறை செயல் விளக்கப் பூங்கா என ஐந்து இடங்களில் காலை 9 மணி முதல் 5 மணி வரை விற்பனை நடைபெறுகிறது. குறைந்தபட்சமாக 110 ரூபாய் முதல் அதிகபட்சமாக 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமன்றி கிறிஸ்துமஸ் மரத்தைச் சுற்றிலும் அலங்கரிக்கப் பல்வேறு வகையான பூச்செடிகளும் விற்பனை செய்யப்படுகிறது.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் காற்று மாசைக் குறைக்கும் நோக்கத்துடனும் தோட்டக்கலை துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சி அனைவரிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதற்கட்டமாகச் சென்னையில் தொடங்கப்பட்டுள்ள இந்த முயற்சி, அடுத்த ஆண்டு மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post