கூட்டுறவு கடன் சங்க ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கடந்த 7 ஆண்டுகளாக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக தொடக்க நிலை கூட்டுறவு சங்கங்கள் முதல் மாநில சங்கங்கள் வரை அகில இந்திய அளவில் பல விருதுகள் பெற்றுள்ளன. இந்நிலையில் கூட்டுறவு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க ஆணையிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அதன் படி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு 20 சதவீத ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்தபட்சம் 988 ரூபாயும், அதிகபட்சம் 4,613 ரூபாயும் உயர்த்தப்படும்.
மத்திய கூட்டுறவு வங்கிகள் ஊழியர்களுக்கு 20 சதவீத ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு குறைந்தபட்சம் 1,114 ரூபாயும் அதிகபட்சம் 16,963 ரூபாயும் உயர்த்தப்படும்.
இதே போன்று நகரக் கூட்டுறவு வங்கிகள், தொடக்கக் வேளாண் கூட்டுறவு மற்றும் ஊரக வங்கிகள் ஊழியர்களுக்கு 20 சதவீத ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பணியாளர் கூட்டுறவு கடன் சங்க ஊழியர்களுக்கு 2.57 மடங்கும், நகர கூட்டுறவு கடன் சங்க ஊழியர்களுக்கு 2.7 மடங்கு ஊதிய உயர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊதிய உயர்வால் கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் 22 ஆயிரத்து 48 பணியாளர்கள் பயன்பெறுவார்கள் என்றும் இதனால் அரசுக்கு ஆண்டுக்கு 143.7 கோடி கூடுதல் செலவாகும் என முதலமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post