கடந்த 80 வருடங்களாக மாலுமிகளுக்கு பயிற்சி அளித்து வரும் ரஷ்யாவின் SEDOV என்ற பாய்மரக் கப்பல், ஆர்டிக் பெருங்கடலின் பனிப்பாறைகளுக்கு இடையே தனது கடினமான பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளது. 100 வயதை எட்டியுள்ள அந்தக் கப்பல் குறித்த சிறிய தொகுப்பை தற்போது காணலாம் ..
STS SEDOV என அழைக்கப்படும் பாய்மரக் கப்பல், ஜெர்மனியால் கடந்த 1921ம் ஆண்டு கட்டப்பட்டது. 1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரில், ஜெர்மன் சரணடைந்த நிலையில், அந்தக் கப்பலை கைப்பற்றிய இங்கிலாந்து, அதனை ரஷ்யாவிடம் ஒப்படைத்தது.
ரஷ்யா அதனை கடற்படை மாலுமிகளுக்கு பயிற்சி தரும் கப்பலாக மாற்றி பயன்படுத்தி வருகிறது. கடந்த 75 வருடங்களாக ரஷ்ய கடற்படையினருக்கு பயிற்சி அளித்து வரும் இந்தக் கப்பலை, எலும்பை தாக்கும் அளவிற்கு குளிர் நிலவும் ஆர்ட்டிக் கடலின் வடக்கு பகுதி வழியே இயக்கி, உலகைச் சுற்றிவர முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கடந்த ஒரு வருடமாக கடுங்குளிர் நிலவும் பகுதிகள் வழியே பயணித்து, ரஷ்யாவின் kaliningard என்ற பகுதியை அடைந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முன்கூட்டியே திட்டமிட்ட பல்வேறு துறைமுகங்களுக்கு செல்லாவிட்டாலும், பயணம் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்ததாக, கப்பலில் பயணித்த பயிற்சி மாலுமிகள் தெரிவித்தனர்.
சவாலான பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பாய்மரக் கப்பலை, வான வெடிகள் வெடித்து அந்நாட்டினர் வரவேற்றனர். கடந்த 100 வருடங்களுக்கும் மேலாக, அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு, அதே கம்பீரத்துடன் காட்சியளிக்கும் இந்தக் கப்பல், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post