ராஜஸ்தானில் அசோக் கெலாட் ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட், துணை முதலமைச்சர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.முதலமைச்சர் அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே அதிகாரப்போட்டி பகிரங்க மோதலாக வெடித்தது. ஜோதிராதித்ய சிந்தியாவை போன்றே சச்சின் பைலட்டும் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணையப்போவதாக தகவல் வெளியாகியது. இதனிடையே ஜெய்ப்பூரில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 97 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றதால், சச்சின் பைலட்டுக்கு 10 எம்.எல்.ஏக்களின் ஆதரவு மட்டுமே இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற 2-வது ஆலோசனை கூட்டத்தில் சச்சின் பைலட் முகாமில் இருந்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 7 பேர் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இதனால் முதலமைச்சர் அசோக் கெலாட்டை ஆதரிக்கும் எம்.எல்.ஏக்களின் பலம் 102 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து, சச்சின் பைலட்டிடம் இருந்து துணை முதலமைச்சர் பதவியும், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியும் அதிரடியாக பறிக்கப்பட்டுள்ளது. அவரது ஆதரவாளர்கள் 2 பேரின் அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. சச்சின் பைலட்டுக்கு ஆதரவு தெரிவித்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளதால் ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.
Discussion about this post