ஐப்பசி மாத பூஜைகளுக்காக இன்று முதல் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது.
கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதை தடுக்கும் வகையில் கோயில்களில் வழிபாடு நடத்த பொதுமக்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பக்தர்களின்றி கோயில்கள் வெறிச்சோடியது. உலகப்புகழ்பெற்ற சபரிமலையிலும், பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டுவரும் நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயில் அக்.16 முதல் ஐப்பசி மாத பூஜைகளுக்காக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. எனினும், இன்று எவ்வித பூஜையும் நடைபெறாது எனத் தெரிவித்துள்ள கோவில் நிர்வாகம், நாளை முதல் தேதி முதல் 22ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், நாளொன்றுக்கு 250 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், பக்தர்கள் அனைவரும் கொரோனா தொற்று இல்லை என்ற மருத்துவச் சான்றிதழைக் கண்டிப்பாக எடுத்துவர வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.