இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்க அணி தடுமாற்றம்

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் புனேவில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 601 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக கேப்டன் கோலி 254 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிரடியாக விளையாடிய ரவிந்திர ஜடேஜா 91 ரன்கள் எடுத்தார். ரகானே 59 ரன்களும், புஜாரா 58 ரன்களும், இளம் வீரர் மயங்க் அகர்வால் 108 ரன்களும் சேர்த்தனர்.

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி, தொடக்க ஆட்டக்காரர்கள் எல்கர் 6 ரன்னிலும், மற்றொரு வீரர் எய்டன் மார்க்ராம் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்து மோசமான தொடக்கத்தை தந்தனர். இதனால் ரன் சேர்க்க முடியாமல் தென் ஆப்பிரிக்க அணி திணறி வருகிறது. 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்துள்ளது. 565 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்க அணி இன்று தனது முதல் இன்னிங்சை தொடர்கிறது.

Exit mobile version