ஜனவரி முதல் நாளில் இருந்து ரூபே, யுபிஐ அட்டைகள் மூலம் வாடிக்கையாளர்களிடம் பணம் பெறும் வணிகர்களுக்குக் கட்டணம் கிடையாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதிநிலை அறிக்கை தயாரிப்பதை முன்னிட்டுப் பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அட்டைகள் மூலம் வாடிக்கையாளர்களிடம் தொகையைப் பெறும் நிறுவனங்களிடம் வங்கிகள் கட்டணம் பெறுவது குறித்து விவாதிக்கப்பட்டது. விசா, மாஸ்டர்கார்டு உள்ளிட்ட அட்டைகள் மூலம் செலுத்தப்படும் பணத்துக்கு இப்போது 2 விழுக்காடு வரை வணிகர்களுக்குக் கட்டணம் பெறப்படுகிறது. இந்நிலையில் பணமில்லாப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் முதல் ரூபே, யுபிஐ அட்டைகள் மூலம் பெறப்படும் பணத்துக்கு வணிகர்களுக்குக் கட்டண விலக்கு அளிக்க வங்கித் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இதையடுத்துக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், ஜனவரி ஒன்றாம் தேதி முதல் கட்டண விலக்கு நடைமுறைக்கு வருவதாகத் தெரிவித்தார்.
Discussion about this post