கோவை அருகே பணம் இருப்பதாக கூறி கண்டெய்னர் லாரியை பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உக்கடம் ஆத்துப்பாலம் பகுதியில் நேற்று இரவு கண்டெய்னர் லாரி ஒன்று வேகமாக சென்றது. அதைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக விரட்டிச் சென்று நிறுத்தினர். லாரி ஓட்டுநர் பிரகாஷ் முன்னுக்குப்பின் முரணாக பேசிய நிலையில், லாரியில் கட்டுகட்டாக பணம் இருப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து ஏராளமானோர் அங்கு குவிந்தனர். தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
கண்டெய்னர் லாரி தாராபுரத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது எனத் தெரிய வந்தது. லாரியை ஆட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு வந்து திறந்து பார்த்த போது, அதில் டீத்தூள் பண்டல்கள் இருப்பது தெரிய வந்தது. ஜெர்மனிக்கு ஏற்றுமதி செய்வதற்காக இவை கொண்டு செல்லப்படுவதாக தனியார் நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
லாரியில் உள்ள அனைத்து மூட்டைகளையும் சோதனை செய்ய வேண்டும் என்று ஒரு தரப்பினர் கோரிக்கை வைத்ததால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே கண்டெய்னர் லாரி நிறுத்தப்பட்டுள்ளது.