உடல், மனம், பணம் என அனைத்திற்கும் ஒரே நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய, கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
சூதாட்டம் என்று மக்கள் ஆட தயங்கிய ஒரு விளையாட்டு; வீட்டிற்கு தெரியமால் ஒளித்து மறைத்து ஆடிய ஒரு விளையாட்டு; தற்போது அது பந்தி வைக்கப்பட்டு பரவலாகியுள்ளது எனில், அதற்கு காரணம் நடிகர்களின் பேராசை தான். கோடிகளில் வாங்கும் சம்பளம் போதாதென, காஜல் அகர்வால் தொடங்கி சாக்ஷி அகர்வால் வரை, அந்த உயிர் கொல்லி விளையாட்டுக்கு பிராண்ட் அம்பாசிடராகி, அதனை பிரபலப் படுத்தினார்கள்.
டிவி, கணினி, போன் என, எதைத் திறந்தாலும், நான் ஆடுறேன்… நீங்களும் ஆடுங்க.. லட்சம் லட்சமா சம்பாதிங்க என்று, தங்களின் நம்பிகைக்குரிய நட்சத்திரங்கள், சதா நச்சரித்துக் கொண்டே இருந்தால், சாமானியன் மன நிலை என்னவாகும்..? இதில், ஊரடங்கு காலம் வேறு. மந்தை மந்தையாக ஆடுகள் பள்ளத்தில் விழுந்தன. அதில் சில ஆடுகள் பலியும் ஆகின. பொறுமை இழந்த அரசு, ரம்மி எனும் ராட்சஷனுக்கு தடை செய்து முடிவு கட்டியது.
சில காலம் பம்மி இருந்த ரம்மி நிறுவனங்களுக்கு, நீதிமன்றம் தடையை நீக்கி மீண்டும் றெக்கை கட்டியுள்ளது. கடந்த ஆண்டு, புதுச்சேரியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர், 38 லட்சம் ரூபாயை ரம்மியில் தொலைத்துவிட்டு, தீக்குளித்து இறந்தார். சாவதற்கு முன்பு கதறி அழுதபடி அவர் பேசிய ஆடியோவை கேட்டால் தெரியும்… நீதிமன்றம் சொன்னது போல ரம்மி பொழுது போக்கு விளையாட்டா .? உயிர்கொல்லி விளையாட்டா..? என்று.
எப்படியாவது ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்து விடு என்று தனது மனைவி நல்லாமாளிடம் அவர் கதறிய கதறல் அனைத்தும் இன்று கருணையின்றி நிராகரிக்கப்பட்டுள்ளது. தடையை நீக்கிய அன்றே, ஆன்லைன் விளையாட வாங்க என்று, மெசேஜில் கிட்னி திருடும் அழைப்புகள் வர தொடங்கி விட்டன. இனி எத்தனை இளைஞர்கள், எத்தனை பெண்கள், எத்தனை குடும்பம் நடுத்தெருவுக்கு வர போகின்றன என்று தெரியவில்லை. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வலாம்…. ஆனால் கவ்விக் கொண்டே இருந்தால் என்ன செய்வது…..
Discussion about this post