விளையாடும் ரூபிக் கியூப்ஸ்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட மோனலிசா ஓவியம் ஒன்று, இந்திய மதிப்பில் 3 கோடியே 70 லட்சத்திற்கு ஏலம் போன சம்பவம் கலை ஆர்வலர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
உலகின் மிகப் பிரபலமான ஓவியம் என்ற புகழ் மோனலிசா ஓவியத்தையே சாரும், உலகப் புகழ்பெற்ற ஓவியரும் பல்துறை அறிஞருமான லியனார்டோ டா வின்சியால் வரையப்பட்ட இந்த ஓவியம் உலக மக்கள் அனைவருக்கும் பரிச்சயமான ஒன்றாக உள்ளது. இதனால் பல ஓவியர்கள் தாங்களும் மோனலிசாவைப் போன்ற ஒரு ஓவியத்தை வரைய முயன்று தோற்று உள்ளனர். ஏனென்றால் மோனலிசாவின் மந்திரப் புன்னகையையும், மோனலிசா ஓவியத்திற்குள் உள்ள ரகசியக் குறியீடுகளையும் யாராலும் மீள் உருவாக்கம் செய்ய முடிந்தது இல்லை.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல ஓவியக் கலைஞரும், தனது அடையாளத்தை இதுவரை பொதுவெளியில் வெளியிடாதவருமான ‘இன்வேடர்(Invader)’ என்பவர் கடந்த 2005ஆம் ஆண்டில், குழந்தைகள் விளையாடும் 330 ரூபிக் கியூப்களைப் பயன்படுத்தி ஒரு மோனலிசா ஓவியத்தை உருவாக்கினார். இந்த ரூபிக் கியூப் மோனலிசாவில், மோனலிசா ஓவியத்தில் காணப்பட்ட அதே மந்திரப் புன்னகை உள்ளதாகப் போற்றப்பட்டதால், இது உலகின் பல்வேறு பிரபல கலைக் கூடங்களிலும் காட்சிக்கு வைக்கப்பட்டது.
இந்த புகழ்பெற்ற ரூபிக் கியூப் மோனலிசா ஓவியம் சமீபத்தில் பாரீசில் நடந்த ஏலம் ஒன்றில் விற்பனைக்கு வைக்கப்பட்டது. இந்திய மதிப்பில் சுமார் 1 கோடிக்கு ஆரம்ப விலை நிர்ணயிக்கப்பட்ட இந்த ஓவியம், எதிர்பார்ப்புகள் அனைத்தையும் மீறி, 3 கோடியே 70 லட்சத்துக்கு விற்பனையாகி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
குழந்தைகள் விளையாடும் ரூபிக் கியூப்ஸ்களைக் கொண்டு, முகம் தெரியாத ஓவியர் உருவாக்கிய ஓவியம் ஒன்று மூன்றே முக்கால் கோடிக்கு ஏலம் போன செய்தி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகின்றது.
Discussion about this post