நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், தூர் வாரவும் 56 திட்டப்பணிகளுக்காக 555 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில், பொதுப்பணித்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
மழை நீர் வீணாக கடலில் தடுப்பதை தடுக்க நவீன நீர் மேலாண்மை தொழில்நுட்பத்தை ஏற்படுத்த கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதிகள் வேணுகோபால், வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இந்த வழக்கில் பொதுப்பணித்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அடையாறு, கூவம் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயில் இருந்த 10 ஆயிரத்து 347 ஆக்கிரமிப்புகளில், 4 ஆயிரத்து 161 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், அடையாறு நதி 6 கோடியே 18 லட்சம் ரூபாய் செலவில் தூர்வாரப்பட்டுள்ளதோடு, 50 லட்சம் ரூபாய் செலவில் அதன் கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 56 பணிகளுக்கு 555 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னை ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு முழு மூச்சாக செயல்பட்டு வருவதாகவும் பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளங்களை பாதுகாக்க முதல் கட்டமாக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு குடிமராமத்துப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க தலைமை செயலர் முன்னிலையில் அனைத்து துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைக்க உத்தரவிட்ட நீதிபதிகள், 6 மாத காலத்திற்குள் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
Discussion about this post