ஐ.பி.எல். தொடரில் டெல்லி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது
அகமதாபாத் நகரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர் கோலி 12 ரன்களிலும், படிக்கல் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த ரஜத் பட்டிதர் 31 ரன்கள் சேர்த்து வெளியேற, மேக்ஸ்வெல் 25 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
இறுதியில் அதிரடி வீரர் டி-வில்லியர்ஸ் 42 பந்துகளில் 75 ரன்கள் விளாசினார்.
இதில் 5 சிக்சர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் சேர்த்தது.
172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி வீரர்கள் களமிறங்கினர்.
தவான்,ஸ்மித் ஆகியோர் சோபிக்க தவறினாலும், அதிரடியாக விளையாட முற்பட்ட பிரித்வி ஷா 21 ரன்களில் வெளியேறினார்.
ஒரு கட்டத்தில் தடுமாறிய டெல்லி அணியை ரிஷப் பண்ட், ஸ்டோனிஸ் ஜோடி ரன்களை சேர்த்து மீட்டது.
இறுதியில் அதிரடி வீரர் ஹெட்மயர் 25 பந்துகளில் 53 ரன்கள் விளாசினார். இதனால் கடைசி ஓவரில் டெல்லி வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது.
இதில் பெங்களூர் அணியின் முகமது சிராஜ் கட்டுக்கோப்பாக பந்துவீசினார். இதனால் கடைசி பந்தில் டெல்லி அணியின் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது.
ஆனால் ரிஷ்ப் பண்டால் பவுண்டரி மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் பெங்களூரு அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரிஷப் பண்ட் 58 ரன்களுடன் களத்தில் நின்றார்.
இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது.
சிறப்பாக விளையாடிய டிவில்லியர்ஸ் ஐ.பி.எல். வரலாற்றில் 25வது முறையாக ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
Discussion about this post