விழுப்புரத்தை சேர்ந்த பிரபல ரவுடி தாதா மணி என்கிற மணிகண்டன் சென்னையில் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
விழுப்புரம் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த ரவுடி தாதா மணிகண்டன் சென்னை கொரட்டூரில் பதுங்கி இருந்தார். ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து விழுப்புரம் தனிப்படை காவல்துறையினர் சென்னை வந்துள்ளனர். ரவுடி தங்கி இருந்த வீட்டை சுற்றி வளைத்தபோது, காவல்துறையினரை தாக்கி விட்டு, ரவுடி மணிகண்டன் தப்பிக்க முயன்றுள்ளார்.
இதையடுத்து தற்காப்புக்காக காவல்துறையினர் சுட்டதில், ரவுடி தாதா மணிகண்டன் பலியானார். ரவுடி மணிகண்டனின் கூட்டாளிகள் 3 பேரை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். ரவுடி தாக்கியதில் காயம் அடைந்த ஆரோவில் காவல் உதவி ஆய்வாளர் பிரபு, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை சட்டம் ஒழுங்கு காவல் துறை ஏடிஜிபி ஜெயந்த் முரளி நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
என்கவுண்டரில் பலியான ரவுடி தாதா மணிகண்டன், விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகாவில் உள்ள குயிலா பாளையத்தை சேர்ந்தவர். ரவுடி மணிகண்டன் மீது 8 கொலை வழக்கு உட்பட்ட 27 வழக்குகள் நிலுவையில் உள்ளன. விழுப்புரத்தை சேர்ந்த ரவுடிகள் பூபாலன் – தாதா மணிகண்டன் இடையே நடந்த கோஷ்டி மோதல்களில் 21 கொலைகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
ரவுடி மணிகண்டனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. ரவுடி என்கவுன்டர் செய்யப்பட்ட சம்பவம் சென்னை கொரட்டூரில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Discussion about this post