இந்தியா-மேற்கிந்திய தீவுகள் இடையிலான இன்றைய டி-20 ஆட்டத்தில் நட்சத்திர வீரர் ரோகித் ஷர்மா புதிய உலக சாதனை படைக்கும் முனைப்புடன் களமிறங்குகிறார்.
சிக்ஸர் மன்னன் கிரிஸ் கெயிலின் அதிக சிக்ஸர்கள் சாதனையை இன்று அவர் முறியடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. டி-20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் விளாசியவர் என்ற பெருமை கெயிலிடம் உள்ளது. இதுவரை 58 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 105 சிக்ஸர்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். கெயிலைத் தொடர்ந்து, நியூஸிலாந்து வீரர் மார்டின் கப்தில் 76 போட்டிகளில் 103 சிக்ஸர் அடித்து 2-வது இடத்தில் உள்ளார்.
இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா 102 சிக்ஸர்களுடன் 3-வது இடத்தில் உள்ளார். கெயிலின் 105 சிக்ஸர்களை முறியடிக்க ரோஹித் சர்மாவுக்கு இன்னும் 4 சிக்ஸர்கள் மட்டுமே தேவைப்படுகிறது. இதன்மூலம், இன்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா புதிய சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டி-20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் எனும் பெருமையை ரோஹித் சர்மா தக்கவைத்துள்ளார். இதுவரை 4 சதங்கள், 16 அரைசதங்களுடன் 2,331 ரன்களை ரோஹித் சர்மா குவித்துள்ளார்.