கோவை மாவட்டம் அவிநாசி அருகேயுள்ள, முன்னாள் சபாநாயகர் தனபால் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு படுமோசமாகியுள்ளதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
முன்னாள் சபாநாயகரும் அவிநாசி சட்டமன்ற உறுப்பினருமான தனபால், அவிநாசியை அடுத்துள்ள ராக்கியாபாளையத்தில் குடும்பத்துடன் வாடகைக்கு தங்கி வசித்து வருகிறார்.
பொங்கலை தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் உள்ள தாதக்காபட்டிக்கு குடும்பத்துடன் சென்ற நிலையில், அவரது வீட்டில் ஏதோ சத்தம் வருவதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.
இதையடுத்து, அவிநாசியில் உள்ள அவரது நண்பர்கள், வீட்டிற்கு சென்று பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி இருப்பது தெரியவந்தது.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் ஆய்வு செய்ததில், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும், ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பிலான இரண்டு வெள்ளி குத்து விளக்குகளும் திருடப்பட்டது தெரியவந்தது.
சிசிடிவி கேமராக்களை சோதனை மேற்கொண்டதில், அடையாளம் தெரியாத நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் கொள்ளையடித்தது தெரியவந்தது. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திமுக ஆட்சியில், முன்னாள் சபாநாயகர் வீட்டிலேயே கொள்ளை சம்பவம் நடைபெறுகிறது என்றால், சாதாரண மக்களின் நிலைமை என்னவாகுமே என சமூக ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர்.
Discussion about this post