விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
30வது சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “சாலைப் பாதுகாப்பு – உயிர்ப் பாதுகாப்பு” என்ற கருப்பொருளை மையப்படுத்தி சாலைப் பாதுகாப்பு வாரவிழா கடைபிடிக்கப்படுவதாக கூறியுள்ளார்.
தலைக்கவசம், சீட்பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வு, ஓட்டுநர்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள், சாலைப் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றல், பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சாலை பாதுகாப்பிற்காக ஒவ்வொரு ஆண்டும் ரூ.65 கோடி தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருவதாகவும், 2017ம் ஆண்டைவிட 2018ம் ஆண்டு 3% குறைந்துள்ளதாகவும், இறப்பு விகிதம் 25% குறைந்துள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சாலைப் பாதுகாப்பு பணிகளை ஊக்குவிக்கும் வகையில், சிறப்பாக செயல்படும் மூன்று காவல் துறை ஆணையகரத்திற்கு முதலமைச்சர் விருது வழங்கப்படும் என்றும், விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
Discussion about this post