இயக்குநர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே. செல்வமணி வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்திற்கான தேர்தல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அந்த வகையில் சென்னை வடபழனியில் உள்ள திரைப்பட இசை கலைஞர்கள் சங்க வளாகத்தில், காலை 7 மணிக்கு தொடங்கிய தேர்தல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.
தலைவர் பதவிக்கு இயக்குநர் ஆர் கே செல்வமணியும், இயக்குநர் வித்யாசாகரும் போட்டியிட்டனர். பொதுச் செயலாளர் பதவிக்கு ஆர்.வி. உதயகுமாரும், பொருளாளர் பதவிக்கு இயக்குநர் பேரரசுவும் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தலைவர், 2 துணை தலைவர், 4 இணை செயலாளர்கள், 12 செயற்குழு உறுப்பினர் ஆகுய பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவுக்கு பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டன.
தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்கே செல்வமணி, பதிவான 1,503 வாக்குகளில், 1,386 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வித்யாசாகர் 100 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். அதே போன்று, துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கே.எஸ் ரவிக்குமார் 1,289 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மற்றொரு துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ரவி மரியா 1,077 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
Discussion about this post