தமிழகம் முழுவதும், ஒரு நாள் மட்டும் கடைகள் திறந்திருக்கும் என்பதால், ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்க, கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக, ஒரு வாரம் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. இதனையொட்டி கடைகள் அனைத்தும் காலை முதல் இரவு 9 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்க மக்கள் கடை வீதிகளில் திரண்டனர்.
சென்னை கொத்தவால்சாவடியில் பொருட்களை வாங்குவதற்கு காலை 6 மணி முதல் பொதுமக்கள் திரண்டனர். பாதுகாப்பு இடைவெளியை கடைபிடிக்காமல் கொரோனா அச்சம் கொஞ்சமுமின்றி பொருட்களை வாங்கிச் சென்றனர்.
ஜாம்பஜாரில் மக்கள் கூட்டம் அலைமோதியது. போரூர் சந்திப்பில் அத்தியாவசியப் பொருட்களை வாங்க மக்கள் படையெடுத்தனர். இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விழுப்புரத்தில் சிறு காய்கறி கடை முதல் பல சரக்கு கடைகள் வரை அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. கடை வீதிகளுக்கு செல்லும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.சேலம் சூரமங்கலம் உழவர் சந்தை, ஆற்றோர காய்கறி சந்தை, அஸ்தம்பட்டி, தாதகாப்பட்டி சந்தை ஆகிய பகுதிகளில் மக்கள் அலைகடலென திரண்டனர். இதேபோன்று செவ்வாய்பேட்டை மற்றும் லீ-பஜார் பகுதிகளிலும் கூட்டம் அலைமோதியது.
ஈரோடு கொங்காலம்மன் கடை வீதியில், காய்கறி, மளிகை வாங்க கட்டுக்கடங்காமல் மக்கள் திரண்டனர். முக்கிய சாலைகள், கடை வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. தேனியில் உள்ள கடை வீதிகளில் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டனர். பழைய பேருந்து நிலையம் மற்றும் கடை வீதிகளில் கடும் நெரிசல் ஏற்பட்டது. திண்டுக்கல் அரசமரத்து வீதி, பெரியகடை வீதி, காட்டாஸ்பத்திரி அரசு மருத்துவமனை சாலை, மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.விழுப்புரத்தில், எம்ஜி ரோடு, பாகர்ஷா விதி, காமராஜர் வீதி, திரு.வி.க வீதி, நேரு வீதி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
இதேபோன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடை வீதிகளில், பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் மக்கள் அதிகளவில் திரண்டதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
Discussion about this post