இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டி கொண்ட 20 ஓவர் தொடர் சமனில் முடிந்தது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், மற்ற இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமமாக வெற்றி பெற்றன.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு டி20 போட்டியிலும் விளையாடிய ரிஷப் பந்த், மொத்தமாக 23 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால், கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளார். இந்நிலையில், ரிஷப் பந்தால், 4-வது இடத்தில் வெற்றிபெற முடியவில்லை என்று முன்னாள் வீரர் வி.வி.எஸ். லக்ஷ்மண் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு பதிலாக பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் பணிக்கு புதிய ஒருவரை அடையாளம் காணலாம் என்று பரிந்துரைக்கிறார்.
இந்திய அணிக்கு பல்வேறு வெற்றிகளை தேடி தந்த எம்.எஸ்.தோனியின் 4-ம் இடத்தில் ரிஷப் பந்த் களமிறங்கி விளையாடுவதால் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இதனால், ரிஷப் பந்த் மீண்டும் தனது நம்பிக்கையை திரும்ப பெறுவதற்கு அணி நிர்வாகம், 5 அல்லது 6-வது இடத்தில் களமிறக்கி அவரது ஆட்டத்தை விளையாட அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
4-வது வரிசைக்கு ரிஷப் பந்தை காட்டிலும் அனுபவமுள்ள ஹர்த்திக் பாண்டியா அல்லது ஸ்ரேயாஸ் அய்யரை விளையாட வைக்கலாம் என்று லக்ஷ்மண் யோசனை வழங்கியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது இளம் வீரராக இருப்பவர் ரிஷப் பந்த். டோனிக்கு அடுத்த மாற்று விக்கெட் கீப்பர் என்று கருதப்படுகிறார். ஐபிஎல் போட்டிகளில் ரன்களை குவித்துவரும் நிலையில், சர்வதேச போட்டிகளில் திணறி வருவது குறிப்பிடத்தக்கது.