பொதுச்சொத்துகளை சேதப்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1998ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கள்ளச்சாராயத்தை எதிர்த்து, நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. இந்த சம்பவத்தில் 108 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த, எம்.பி., எம்.எல்.ஏ.க்களை விசாரிக்கும் நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
இதையடுத்து, பொதுச்சொத்துகளை சேதப்படுத்திய வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடைக்கோரி பாலகிருஷ்ணரெட்டி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. மேலும்,சென்னை உயர்நீதிமன்ற வழக்கில் இருந்து தீர்ப்பு வரும்வரை பாலகிருஷ்ண ரெட்டி சிறை செல்ல தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.