டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேட்டில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும், ஜெயக்குமாரை பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என சிபிசிஐடியினர் தெரிவித்துள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடுகள் தொடர்பாக, முக்கிய குற்றவாளியான ஜெயக்குமார் என்பவரின் வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். முகப்பேரில் உள்ள அவரது வீட்டிலிருந்து மடிக்கணினி, பென்டிரைவ், 60க்கும் மேற்பட்ட பேனாக்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை சிபிசிஐடி காவல்துறையினர் கைப்பற்றினர். மேலும், ஜெயக்குமார் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக சிபிசிஐடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, ஜெயக்குமாரின் புகைப்படம் அச்சிடப்பட்டு மாநிலம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. ஜெயக்குமார் பற்றி தகவல் அளிக்க பிரத்யேக தொலைபேசி எண்களையும் சிபிசிஐடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஜெயகுமார் குறித்து தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் எனவும் சிபிசிஐடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குரூப்-4 தேர்வு முறைகேடுகள் தொடர்பாக இதுவரை 14 பேரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.