ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கான காரணத்தை விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி, 255 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து, இரண்டாவதாக ஆடிய ஆஸ்திரேலிய அணி, விக்கெட் இழப்பின்றி 258 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டேவிட் வார்னர், பிஞ்ச் ஆகிய இருவரும் சதம் அடித்தனர்.
இந்நிலையில், முதல் ஒருநாள் ஏற்பட்ட தோல்வி குறித்து கேப்டன் விராட் கோலி பேட்டியளித்துள்ளார். தற்போது உள்ள ஆஸ்திரேலிய அணி வலுவாக உள்ளது. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் அனைத்திலும் எங்களை முழுமையாக தோற்கடித்து விட்டது. இப்படிப்பட்ட அணிக்கு எதிராக நன்றாக செயல்பட தவறினால், நமக்குத்தான் பாதிப்பு உண்டாகும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய விராட் கோலி, தேவையான ரன்களை எடுக்க தவறியதுடன், ஆட்டத்தின் குறிப்பட்ட நேரத்தில் ரன்கள் எடுக்காதது, தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதேபோல், நான் விளையாடும் இடத்தில் கேஎல் ராகுல் களமிறங்கி ஆடினார். அடுத்த போட்டியில் என்னுடைய வரிசையை மாற்றுவது தொடர்பாகவும் யோசிப்போம் என்று தெரிவித்துள்ளார்.