சென்னையில் மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டை உட்பட பகுதிகளில் கொரோனா தொற்று பரவ அதிக வாய்ப்பு உள்ளதால், அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி நிர்வாகம் சார்பாக பல்வேறு அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, சென்னையில் அரும்பாக்கம், புரசைவாக்கம், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், சாந்தோம், ஆலந்தூர், போரூர், கோட்டூர்புரம் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே வரலாம் என தெரிவித்துள்ள மாநகராட்சி நிர்வாகம் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும், அப்பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ஒருபோதும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. வீட்டின் வெளியே கூடைகள் வைத்து அவர்கள் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.
Discussion about this post