ஞாயிற்றுக் கிழமைகளில் அமல்படுத்தப்பட்ட தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதால், இறைச்சி மற்றும் மீன்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
கொரோனா காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் கடைபிடிக்கப்பட்டு வந்த முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, தலைநகர் சென்னை நீண்ட நாட்களுக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியது. சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் தடுப்புகள் அகற்றப்பட்டு போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.
சென்னை காசிமேட்டில், 5 மாத இடைவெளிக்கு பின், மீன் சந்தையில் மீன் வாங்க ஏராளமானோர் படையெடுத்தனர். இதனால் அதிகாலை நேரத்தில் காசிமேடு மீன் சந்தையில் கூட்டம் அலைமோதியது.
பட்டினப்பாக்கம் மீன் சந்தையில், விற்பனை களைகட்டியது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் சந்தை செயல்பட்டதால், ஏராளமானோர் ஆர்வமுடன் மீன் வாங்கிச் சென்றனர். அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி, வியாபாரிகளும், பொதுமக்களும் முகக் கவசம் அணிந்திருந்தனர்.
ஞாயிறு முழு ஊரடங்கு ரத்தானதால், விழுப்புரம் மாவட்டம் நீண்ட நாட்களுக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியது. முக்கிய கடை வீதிகளில் உள்ள கடைகள் வழக்கம் போல் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. ஜானகிபுரத்தில் உள்ள மொத்த காய்கறி சந்தை திறக்கப்பட்டு, காய்கறி, மளிகை மற்றும் இறைச்சி கடைகளில் வழக்கமான விற்பனை நடைபெற்றது.
Discussion about this post