ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை அறிவிப்பு வெளியீடு

குறுகிய கால வங்கிக்கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 6 சதவிகிதத்திலிருந்து 5.75 சதவிகிதமாக குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்த 6 மாதங்களில் மூன்றாவது முறையாக வட்டிவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் பொறுப்பேற்றவுடன் மும்பையில் நடைபெற்ற முதல் நிதிக்கொள்கை கூட்டத்தில் வங்கிகளுக்காக ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் கால் சதவிகிதம் குறைக்கப்பட்டது.

தொடர்ந்து அடுத்த 2 மாதங்களில் வட்டி விகிதம் மீண்டும் கால் சதவிகிதம் குறைக்கப்பட்டு 6 சதவிகிதமாக அறிவிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் பணவீக்கம் குறைந்து வீடு, வாகனங்களுக்கான வட்டி விகிதங்கள் குறைந்தன.

இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கையை அதன் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று அறிவித்துள்ளார். இதில் வங்கிகளுக்கான குறுகிய கால வட்டி விகிதத்தை மீண்டும் கால் சதவிகிதம் குறைத்து 5.75 சதவிகிதமாக அவர் அறிவித்துள்ளார். கடந்த 6 மாதங்களில் மூன்றாவது முறையாக வட்டிவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ஆன்லைன் மூலம் செய்யப்படும் பண பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளதாக சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். மேலும் ஏ.டி.எம். கட்டணங்களை ரத்து செய்வது குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Exit mobile version