வாடிக்கையாளர்களிடம் தொட்டதெற்கெல்லாம் கட்டணம் வசூலிக்கும் வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏ.டி.எம் அட்டைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தங்களது வங்கியின் ஏ.டி.எம்.களில் ஒரு மாதத்திற்கு 5 முறை கட்டணம் ஏதுமின்றி சேவையைப் பெறலாம் என்ற விதி உள்ளது. சில நேரங்களில் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாகவோ, ஏ.டி.எம்களில் பணம் இல்லாததாலோ, பணப் பரிவர்த்தனை தோல்வியில் முடியும் போது, அதையும் சில வங்கிகள் பரிவர்த்தனையின் கணக்கில் சேர்த்துவிடுகின்றன. இனி அப்படி செய்யக் கூடாது என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.
இது தவிர, வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கின்றது என்று பார்த்தவர்கள், செக் புக்குக்கு ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் – ஆகியோருக்குக் கூட சில வங்கிகள் கட்டணம் விதித்துள்ளன. இவை இலவச சேவைகள் என்று ரிசர்வ் வங்கியால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவை என்பதால், இவற்றுக்கு கட்டணம் விதிக்கப்பட்டதையும் ரிசர்வ் வங்கி கண்டித்துள்ளது.
இவை தவிர, ஏ.டி.எம் மூலம் வருமான வரி கட்டுவது, ஒரு வங்கிக் கணக்கில் இருந்து இன்னொரு வங்கிக் கணக்கிற்கு பணத்தை செலுத்துவது ஆகியவையும் கட்டணமில்லாத சேவைகளே. இவற்றுக்கு வங்கிகள் கட்டணம் விதித்தால் வாடிக்கையாளர்கள் ரிசர்வ் வங்கியிடம் புகார் தெரிவிக்கலாம். பல்வேறு வங்கிகளின் வாடிக்கையாளர்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில், இந்திய ரிசர்வ் வங்கி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஏ.டி.எம், ஆன்லைன் பேங்கிங் வசதிகளைப் பயன்படுத்துபவர்கள், இனி தங்கள் பணப் பரிமாற்றங்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாக உள்ளது. இவர்கள் மாதம்தோறும் அக்கவுண்ட் ஸ்டேட்மெண்ட்களை சரிபார்ப்பதன் மூலம், வங்கிகள் தவறான முறையில் கட்டணம் வசூலித்து இருந்தால் அதைத் தெரிந்து கொள்ளலாம்.