பூண்டி மற்றும் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கங்களை தூர்வாரி கரைகளை பலப்படுத்த, தமிழக அரசு 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், சென்னையின் குடிநீர்த் தேவையை கருத்தில் கொண்டு, 2 நீர்த்தேக்கங்கள் தூர்வாரப்பட்டு, 2 டி.எம்.சி. நீரை அதிகமாக தேக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி செம்பரம்பாக்கத்திற்கு 4 கோடி ரூபாயும், பூண்டி நீர்த்தேக்கத்திற்கு 11 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்பணிகள் மூலம், பூண்டி நீர்த்தேக்கத்திற்கு நீர் தரும் கேசவரம் அணைக்கட்டை மேம்படுத்துதல், செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் வரும் பங்காரு கால்வாயை தூர்வாருதல், நீர்த்தேக்கத்தின் கரைகளை பலப்படுத்துதல், நந்தி மற்றும் நகரி கால்வாய்களை மேம்படுத்துதல் போன்ற பணிகள் செய்யப்பட இருக்கிறது.
இதன்மூலம் செம்பரம்பாக்கம் ஏரியில் 1 கோடியே 51 லட்சத்து 80 ஆயிரத்து 420 கியூபிக் மீட்டர் மண் அள்ளப்பட்டு, அதன் மூலம் 182.16 கோடி ரூபாயும், பூண்டி ஏரியில் 2 கோடியே 4 லட்சத்து 71 ஆயிரத்து 409 கியூபிக் மீட்டர் மண் அள்ளப்பட்டு, அதன் மூலம் 296.56 கோடி ரூபாயும் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post