ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் -திம்பம் மலைப்பாதை வழியாக கர்நாடகாவிற்கு இரவில் செல்லும் லாரிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதால் லாரி ஓட்டுநர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சத்தியமங்கலத்தை அடுத்த அடர்ந்த வனப்பகுதியின் திண்டுக்கல் -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 27 ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதையில் அதிக பாரம் ஏற்றி செல்லும் சரக்கு லாரிகள் மூலம் போக்குவரத்து பாதிப்பு மற்றும் விபத்துக்கள் அதிகளவில் ஏற்படுவதால் மாலை 6 மணிமுதல் காலை 6 மணிவரை சரக்கு லாரிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் பண்ணாரி மற்றும் ஆசனூர் சோதனை சாவடிகளில் நூற்றுக்கணக்கான லாரிகள் இரவில் காத்திருந்து காலை 6 மணிக்கு மேல் அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து தினமும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் 24 மணிநேரமும் சரக்கு லாரிகளை அனுமதிக்க லாரி உரிமையாளர்கள் கோரி வந்தனர்.
இந்நிலையில் மலைப்பாதை வழியாக இரவில் சரக்கு லாரிகள் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதாக காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஆனால் 12 சக்கரங்களுக்கு மேல் உள்ள லாரிகளுக்கும் அதிக பாரம் மற்றும் உயரம் கொண்ட வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Discussion about this post