இரட்டை வேடத்தில் பிகில்; பட்டைய கிளப்பும் 'தளபதி 63'

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், மாஸ் ஹீரோவுமான விஜய், நாளை தனது 45-வது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். இந்நிலையில், நடிகர் விஜய், “தெறி, மெர்சல்” படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கல்பாத்தி எஸ். அகோரம் தயாரித்துள்ளார். நயன்தாரா, கதிர், இந்துஜா உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் பெயர் அறிவிக்கப்படாததால் படப்பிடிப்பு துவங்கிய முதல் நாளில் இருந்தே ‘தளபதி 63’ என்று இதுவரை அழைத்து வந்தனர். தொடர்ந்து படப்பிடிப்பு காட்சிகள் எடுக்கப்பட்டு வந்தநிலையில், செல்போனில் புகைப்படங்களாக எடுக்கப்பட்டு ‘தளபதி 63’ என்று இணையதளங்களில் ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கி கொண்டிருந்தனர். இத்திரைப்படத்தில், பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக வருவது போல், பேசப்பட்டு வருகிறது

இந்நிலையில், ‘தளபதி 63-யின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்’ இன்று மாலை அதிகாரப்பூர்வமாக படக்குழு சார்பில் வெளியிட்டனர். படத்திற்கு “பிகில்” என்று பெயர் வைத்துள்ளனர். பர்ஸ்ட் லுக் போஸ்டரில், இரண்டு விஜய் தோன்றுவது போல் உள்ளது. மேலும், படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் இரவு 12 மணிக்கு வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Exit mobile version