அனைத்து துறைகளிலும் அதிமுக அரசு புரிந்திருக்கும் சாதனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
அதிமுக அரசின் சாதனைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கியது மற்றும் வறுமை கோட்டிற்குகீழ் உள்ள தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை சிறப்பாக பராமரித்ததற்காக முதன்மை விருது பெற்றுள்ளதை பெருமிதத்துடன் சுட்டிக் காட்டியிருக்கும் அவர்,
உணவு தானிய உற்பத்தியில் சாதனை புரிந்ததற்காக கிருஷி கர்மான் விருதை தமிழகம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் சந்தேகங்கள், குறை தீர்வுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 14417 அறிமுகப்படுத்தப்படிருப்பதையும்
முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ், மருத்துவ உதவித் தொகை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
193 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவில் 87 ஆயிரத்து 205 மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர்,
பெண்களுக்கு உதவ இலவச தொலைபேசி சேவை எண் “181” துவங்கப்பட்டிருப்பதையும் தெரிவித்துள்ளார்.
மீன்பிடி தடைக்கால நிவாரணம் 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டதன் மூலம் 3 லட்சத்து16 ஆயிரத்து 183 மீனவ குடும்பங்கள் பயன்பெறுவதாக முதலமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.
பத்திரிக்கையாளர் ஓய்வூதியமாக 10 ஆயிரம் ரூபாயும், குடும்ப ஓய்வூதியமாக 5 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுவதாக தெரிவித்திருக்கும் அவர்,
தொலைதூர வழித்தடத்தை இணைக்க, போக்குவரத்து கழகத்திற்கு 1,955 புதிய பேருந்துகள் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
191 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
69 ஆயித்து 180 கோடி ரூபாய் மதிப்பில் 118.9 கி.மீ. வரையிலான 2ம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டம் தயார் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,
7வது ஊதிய குழு பரிந்துரைபடி திருத்திய ஊதியம் 14 ஆயிரத்து 719 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில், தமிழ்நாடு வணிகர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளதாகவும்
வேலைவாய்ப்பில் திறன்வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
8 லட்சத்து 48 ஆயிரத்து 332 அமைப்பு தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு 347 கோடியே 91 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை தெரிவித்திருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,
2 கோடி ரூபாய் செலவில் சென்னை தண்டையார்பேட்டையில் அம்மா சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
சேலத்தில் 19 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட்டுள்ளதையும்,
659 அரசு இ- சேவை மையங்கள் வாயிலாக 96 லட்சத்து 78 ஆயிரத்து 65 பேர் பயனடைந்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஹஜ் புனித பயணம் செல்ல ஆண்டுதோறும் 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,
600 கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள 1 கோடியே 20 லட்சம் ரூபாய் வழங்கப்படுவதையும் தெரிவித்துள்ளார்.
ஆதி திராவிடர் இனப்பிரிவுகளில் உள்ள 6 பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் எனபெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதை சுட்டிக் காட்டியிருக்கும் அவர்,
தியாகிகளுக்கு மாத ஓய்வூதியம் 13 ஆயிரம் ரூபாயும், வாரிசுதாரர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் 6 ஆயிரத்து 500 ரூபாயும் வழங்கப்படுவதை குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற அனைத்து மக்கள் நலத்திட்டங்களும் தங்கு தடையின்றி கிடைக்க திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வரும் 19ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றிச் சின்னமான இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு அளித்து அதிமுக வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுமாறு வாக்காளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
Discussion about this post